

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் தடைச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த சபாயி கரம்சாரிஸ் தேசிய ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தகைய துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு சுமார் ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்குவதற்காக கைகளால் சாக்கடை, கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை மாநிலங்களிடம் இருந்து ஆணையம் பெற்றது. ஆனால், உண் மையான எண்ணிக்கையை மாநில அரசுகள் மறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதிதாக பட்டியல் அளிக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் சபாயி கரம்சாரிஸ் ஆணையம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆணையத் தலைவர் எம். சிவண்ணா கூறும்போது, “தென்னிந்தியாவில் ஒரு மாநில அரசு, தங்கள் மாநிலத்தில் கையால் கழிவு அள்ளும் தொழிலாளிகள் இல்லை என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், கையால் கழிவு அள்ளும் தொழிலாளி, அத்தொழிலில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தது ஊடகங்க ளில் செய்தியாக வந்துள்ளது. இதன் மூலம் அரசுகள் தாக்கல் செய்துள்ள எண்ணிக்கை தவறு என தெரியவந்துள்ளது. எனவே, புதிய பட்டியல் கோரப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அவர் களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்” என்றார்.