

பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
மக்களவை, சட்டமன்றத் தேர்தலைப் போன்றே பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கையிலும் கட்சியினர் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பதெல்லாம் பழையகால அரசியல். இயல்பு வாழ்க்கைக்கு அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப பாஜக தொண்டர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தாரக மந்திரம். இதனை பாஜகவும் பிரதிபலிக்க வேண்டும். இந்தியா ஒரு பூச்செண்டு போன்றது. அதில் அனைத்து சமுதாய மக்களும் இடம் பெற்றுள்ளனர். பாஜக உறுப்பினராக அனைத்து தரப்பு மக்களையும் சேர்க்க வேண்டும்.
பழைய காலத்தில் உறுப்பினர் சேர்க்கை என்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. அப்போதெல்லாம் படிவங்களை நிரப்பி மக்களை நேரடியாகச் சந்தித்து உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. கணினி தொழில்நுட்ப புரட்சியால் கட்சி உறுப்பினர் சேர்க்கை மிகவும் எளிதாக விட்டது.
ஆன்லைன் மூலம் அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும், சமூக வலைதளங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் பரப்ப வேண்டும். நமது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.
வரும் 2015 மார்ச் 31-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கையை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.