

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சாட்சியங்களிடம் வரும் 17-ம் தேதியிலிருந்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அப்போது, அரசுத் தரப்பு சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரி ஹிமான்ஸு குமார் லால், வேறு சில வழக்குகள் தொடர்பாக வரும் 11
முதல் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். எனவே, விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, நீதிபதி ஓ.பி.சைனி தனது உத்தரவில் “இருதரப்பு வழக்கறிஞர் களின் வேண்டுகோளை ஏற்று, இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணியை வரும் 11-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதியில் மேற்கொள்ள உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.