Published : 25 Nov 2014 04:19 PM
Last Updated : 25 Nov 2014 04:19 PM

கடந்துவிட்டன 6 மாதங்கள்... கருப்புப் பணம் எங்கே?- பிரதமர் மோடிக்கு முலாயம் கேள்வி

'பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கருப்புப் பணம் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. கருப்புப் பணம் மீட்கப்பட்டதா?' என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ், " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம். அந்தப் பணத்தைவைத்து நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இங்கு என்ன நடந்திருக்கிறது. இதுவரை, கருப்புப் பணம் மீட்கப்படவில்லை. புதிய அரசுக்கு 6 மாத காலமாவது அவகாசம் கொடுப்போம் என நினைத்தோம். ஆறு மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

முன்னர் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாவது வெளிநாட்டு வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தின் உத்தேச மதிப்பீட்டையாவது வெளியிட்டது. ஆனால், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதுகூட செய்யவில்லை.

கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பலர் தங்கள் பணத்தை சேமிப்புக் கணக்குகளில் இருந்து எடுத்துவிட்டனர். இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது.

போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளிக்கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஊழல் ஒழிக்கப்படும் என கூறினார்கள்.

அளித்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கலாம் பாஜக தலைமையிலான அரசு" என்று மோடியையும், பாஜக அரசையும் முலாயம் சிங் யாதவ் கடுமையாக விமர்சித்தார்.

நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முலாயம் வலியுறுத்தினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவு நிலவுவது அவசியம் என அவர் கூறினார்.

முன்னதாக, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து குரல் எழுப்பினார் முலாயம் சிங் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x