

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு 2 புதிய அணைகளை கட்டுவதற்கு அம்மாநில வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 300 புலிகள்,6,000 யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வன உயிரிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் என கர்நாடக வனத்துறை முதன்மை காப்பாளர் விநய் லுத்ரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனத்துறையின் எதிர்ப்பை தொடர்ந்து மேகேதாட்டு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் அமைப்பும் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு இடத்தில் 2 புதிய கட்டப்படும் என அறிவித்தது. இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு
மேகேதாட்டுவில் புதிய அணைகளை கட்டுவதற்கும், நீர்மின் நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கும் ராம்நகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் பறிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கனகபுராவில் பல்வேறு விவசாய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக அரசு இந்த திட்டத்தை வேறு வழியிலோ,வேறு இடத்திலோ நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மேகேதாட்டுவில் வாழும் பழங்குடியினரும் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.
வனத்துறை எதிர்ப்பு
இதனிடையே கர்நாடக வனத்துறை முதன்மை காப்பாளர் விநய் லுத்ரா, ‘தி இந்து'விடம் கூறியதாவது:
''கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணைகளோ, நீர் மின் நிலையமோ, கூட்டு குடிநீர் திட்டமோ அமைக்கக்கூடாது. இந்த திட்டத்துக்காக சுமார் 2,500 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்தவும் கூடாது. இதனை நாங்கள் எதிர்க்க முடிவெடுத்துள்ளோம்.
ஏனென்றால் தற்போது கர்நாடக அரசு அணை கட்ட தேர்வு செய்துள்ள பகுதி வன உயிரிகளின் முக்கிய வாழ்விடம். இந்த இடத்தைதான் ஹாசன் மாவட்ட யானைகள் வழித்தடமாக பயன்படுத்துகின்றன.இந்த வனப்பகுதியில் சுமார் 6,000 யானைகள் வாழ்கின்றன.
300-க்கும் மேற்பட்ட புலிகள் வாழ்கின்றன. மேலும் மான், கரடி, நரி என நூற்றுக்கும் மேற்பட்ட வன உயிரிகளும் வாழ்கின்றன. அவைகளின் வாழ்விடத்தை கைப்பற்றி அணை கட்டுவது முறையல்ல. இந்த அணைக் கட்டுவதால் லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்பட இருக்கின்றன. இந்த திட்டத்துக்கு மத்திய வனத்துறையும் கண்டிப்பாக அனுமதி கொடுக்காது.
ஏனென்றால் வனத்தையும், வன உயிரிகளையும் பாதுகாப்பதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் ஓர் அரசே இந்தச் செயலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஆட்சேபணை கடிதம் எழுத முடிவு செய்திருக்கிறோம்.
அதில் 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது 3 கோடியாக இருந்த கர்நாடகத்தின் மக்கள் தொகை தற்போது 6 கோடியாக அதிகரித்துள்ளது. அப்போது மேகேதாட்டு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 5,500. இப்போது 6,000 யானைகள் உள்ளன. கடந்த 24 ஆண்டுகளில் 500 யானைகள் மட்டுமே அதிகரித்திருக்கிறது.
அப்படியென்றால் எத்தனை யானைகள், வன உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. என்பதை யோசித்து பாருங்கள் .எனவே, இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்'.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.