

உத்தரப்பிரதேச கிராமப்புற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் பெண்களை முன்னேற்றும் முயற்சி என்று சமாஜ்வாதி கட்சி அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் நேற்று கூறும்போது, “தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி வளர்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் மஹிலா கிராமின் சம்ர்தி யோஜ்னா திட்டத்தின் கீழ் மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. 3 சதவீத வட்டியுடன் ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை கடன் அளிக்கப்படும்” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “மாயாவதி ஆட்சியில் இந்த கூட்டுறவு வங்கிகள், ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் ரூ. 1,650 கோடி நிதியுதவி அளித்து கூட்டுறவு வங்கிகளை காப்பாற்றினோம். சீரான நிலைக்கு வந்திருக்கும் இந்த வங்கிகளின் தற்போதைய லாபம் ரூ. 88 கோடி” என்றார்.