

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
காஷ்மீர் நிலவரம்:
ஜம்மு-காஷ்மீரில் 87 தொகுதிகள் உள்ளன. இங்கு 72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில், பந்திபுரா, கந்தர்பால் மாவட்டங்களிலும், லடாக்கில் கார்கில் மற்றும் லே மாவட்டங்களிலும், ஜம்மு பகுதியில் ராம்பன், தோடா, கிஸ்த்வார் மாவட்டங்களிலும் 15 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 125 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.
1,787 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5,49,696 ஆண் வாக்காளர்களும், 5,00,539 பெண் வாக்காளர்களும், 15 திருநங்கைகளும் வாக்களிக்க உள்ளனர். இங்கு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், பாஜக, மக்கள் குடியரசுக் கட்சி ஆகியவை பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
தேர்தலையொட்டி, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ தளபதி ஆய்வு:
காஷ்மீர் தேர்தலை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி சுகாக் காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் தனது ஆய்வை துவக்குகிறார். இன்று மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
ஜார்கண்ட் நிலவரம்:
ஜார்க்கண்ட் தேர்தலின் போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, உளவுத் துறை தெரிவித்துள்ளது. உளவுத் துறையின் தகவல்களை அடுத்து, ஜார்க்கண்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி உள்துறை உத்தரவிட்டுள்ளது.
கண்ணிவெடி கண்டெடுப்பு:
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுசைனாபாத் சட்டப்பேரவை தொகுதியில், சாலையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.