பிரதமர் மோடி அழைத்தால் அவருக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்: மோடியின் மனைவி யசோதா பென் விருப்பம்

பிரதமர் மோடி அழைத்தால் அவருக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்: மோடியின் மனைவி யசோதா பென் விருப்பம்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி அழைத் தால், அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவும், சேவை செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று மோடியின் மனைவி யசோதா பென் தெரிவித்தார்.

நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர், தனது கல்வியை தொடர்ந்த யசோதா பென், குஜராத் மாநிலம் வட்கம் மாவட்டத்தில் உள்ள ரஜோஷனா கிராமப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்ட யசோதா பென்னுக்கு, நரேந்திர மோடி பிரதமரானதும் திடீரென புகழ் வெளிச்சம் விழத்தொடங்கி யுள்ளது.

மோடியை பிரிந்தது பற்றி கேட் டால், “இதற்காக நான் கவலைப் படவில்லை. அவர் தேசத்துக்குத் தொண்டாற்றத்தானே என்னை பிரிந்து சென்றார்” என்கிறார் யசோதா பென்.

அவர் கூறும்போது, “மோடியுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. ஆனால், அதை ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன. தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மோடி அழைப்பு விடுத்தால், அதை உடனே ஏற்றுக் கொள்வேன். அவருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.

அவருடன் சேர்ந்து புதிய வாழ்க் கையை தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அதற்கான முதலாவது அடியை அவர்தான் எடுத்துவைக்க வேண்டும். ஊட கங்களிடம் பேசுவதற்கு எனக்கு தயக்கமில்லை. ஆனால், பேசக் கூடாது என்று சிலர் எனக்கு நிர்ப்பந்தம் செய்கின்றனர்” என்றார். ஆனால், அவரை நிர்ப்பந்தம் செய்வது யார் என்பது பற்றிய தகவலைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வடோதராவில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று முதல் முறையாக மோடி வெளிப்படையாக குறிப்பிட்டி ருந்தார். அப்போது, விரைவில் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. அது குறித்து கேட்டபோது, “வேட்பு மனுவில் என்னை மனைவி என்று அவர் குறிப்பிட்டதை அறிந்து ஆனந்த கண்ணீர் விட்டேன். அப்போது, விரைவில் என்னை தன்னுடன் சேர்த்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. என்றாவது ஒருநாள் என்னை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் யசோதா பென்.

பிரதமரின் மனைவியாக உலகம் சுற்றி வர விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, “அவர் என்னை ஏற்றுக் கொள்ளாமல், அது எப்படி முடியும்? எனக்கு மரியாதை அளித்து அவர் அழைத்தால், நிச்சயம் செல்வேன்” என்றார் யசோதா.

மோடியின் மனைவி என்ற அங்கீகாரம் என்றாவது ஒருநாள் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் யசோதா பென்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in