

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பர்சேகர் பதவியேற்று கொண்டார்.
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று காலையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பனாஜி யில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பர்சேகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற எளிய விழாவில் மாநிலத் தின் புதிய முதல்வராக லட்சுமி காந்த் பர்சேகர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாண மும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
டிசோஸா நிபந்தனை
பிரான்சிஸ் டிசோஸா தொடர்ந்து துணை முதல்வராக நீடிக்கிறார். அவர் முதல்வர் போட்டியில் இருந்து விலக 2 நிபந்தனைகளை விதித்திருப் பதாகக் கூறப்படுகிறது. தனது துறை சார்ந்த கோப்புகளை முதல் வருக்கு அனுப்பமாட்டேன் என்றும் முதல்வரிடம் ஆலோசிக்காமல் சொந்தமாக முடிவெடுப்பேன் என்றும் அவர் நிபந்தனை விதித்திருப்பதாக கோவாவின் முன்னணி நாளிதழான ‘ஓ ஹெரால்டோ’ தெரிவித்துள்ளது.
மனோகர் பாரிக்கர் அமைச்சர வையில் 11 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது பர்சேகர் அமைச்சரவையில் 9 பேர் மட்டுமே உள்ளனர். காலியாக உள்ள 2 இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
ஆசிரியர் முதல்வரானார்
புதிய முதல்வராக பதவியேற் றுள்ள லட்சுமிகாந்த் ஆரம்பத்தில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற் றினார். அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர்.
அவர்களின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். மீதான பற்றில் அந்த இயக்கத்தில் பர்சேகர் இணைந்தார். 1980 முதல் கோவா மாநில பாஜகவின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையிலேயே பர்சேகர் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.