

சத்தீஸ்கர் அரசும், பஸ்தார் காவல்துறையும் மாவோயிஸ்ட்களை தேவையில்லாமல் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடனும், முஸ்லிம் தீவிர அமைப்புகளுடனும் தொடர்பு படுத்தி சதி வேலை செய்வதாக மாவோயிஸ்ட் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து தண்டகாரண்ய சிறப்பு மண்டல கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் குட்சா உசெண்டி, பஸ்தாரில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அரசும், போலீஸும் தொடர்ந்து மாவோயிஸ்ட்களை முஸ்லிம் தீவிர அமைப்புகளுடனும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனும் தொடர்பு படுத்தி பேசி வருகின்றனர். இந்த சதியின் ஒரு பகுதியாகவே பஸ்தாரில் உள்ள ஹரெகோடட் கிராமத்தில் செப்.19-ஆம் தேதி முஸ்லிம் இளைஞர் ஒருவரை போலீஸ் என்கவுண்டர் செய்தனர். பிறகு அந்த இளைஞரை மாவோயிஸ்ட் என்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், அனைத்து முஸ்லிம் மக்கள், சிறுபான்மை சமூக அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்பினர், மற்றும் ஊடகங்கள் ஆகியோருக்கு, செப்.19 முஸ்லிம் இளைஞர் என்கவுண்டர் குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
"உண்மைகள் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். கொல்லப்பட்ட முஸ்லிம் நபர் அடையாளம் காணப்பட்டுவிட்டது. எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் கூறுவதெல்லாம், கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்ல, எங்கள் பகுதியைச் சேர்ந்தவரும் அல்ல என்பதே. நாங்கள் இது குறித்து தனிப்பட்ட விசாரணையை ஏற்கனவே நடத்தியுள்ளோம்” என்றார் அந்தச் செய்தித்தொடர்பாளர்.