

2ஜி வழக்கு விசாரணை இனி சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே.தத்தாவின் மேற்பார்வையில் நடைபெறும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை, 2ஜி வழக்க்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, சிபிஐ இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு இயக்குநர் அனில் சின்ஹா, விசாரணை பொறுப்பை ஏற்கலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த பொறுப்பு தற்போது சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே.தத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வழங்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி 2010-ம் ஆண்டில் சுட்டிக் காட்டினார். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தனியாகப் சந்தித்துப் பேசியதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ.எல். என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு ஆதாரமாக ரஞ்சித் சின்ஹா வீட்டில் சி.ஆர்.பி.எப். போலீஸாரால் பராமரிக்கப்படும் பார்வையாளர் வருகைப் பதிவேடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இனிமேல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ரஞ்சித் சின்ஹா தலையிடக்கூடாது. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சிபிஐ மூத்த அதிகாரி மேற்பார்வையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும்" என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.