துப்பாக்கி முனையில் பெண்ணை நடனம் ஆடவைத்த போலீஸ் காவலர் இடைநீக்கம்

துப்பாக்கி முனையில் பெண்ணை நடனம் ஆடவைத்த போலீஸ் காவலர் இடைநீக்கம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையுடன் துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை நடனமாட மிரட்டிய சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாஜகான்பூர் மாவட்டத்தில் கிராமத் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீஸ் காவலர் சைலேந்திர குமார் சுக்லா, அங்கு நடன நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு ஏறி சென்றார்.

அப்போது நடனமாடிக் கொண்டிருந்த பெண் அருகே சென்று, அவரைத் தொடர்ந்து நடனமாடக் கூறி, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எடுத்து அந்தப் பெண்ணின் மீது வீசினார். நடனமாடிய பெண்ணும் உற்சாகத்துடன் தொடர்ந்து ஆடி வந்தார்.

இதனால் திருவிழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் இச்சம்பவத்தை வியப்புடன் பார்த்தனர். ஒரு கட்டத்தில், அந்தப் பெண் தொடர்ந்து ஆட முடியாமல் சோர்வுடன் மெதுவாக ஆடத் தொடங்கினார். அதனால் கோபமடைந்த காவலர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து, அந்தப் பெண்ணை நோக்கி வைத்தபடி, தொடர்ந்து ரூபாய் நோட்டுகளையும் வீசி, நடனமாடுவதை நிறுத்தக்கூடாது என்று மிரட்டினார்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த அனைவரும் அதிர்ந்து, அந்தப் பெண்ணை விட்டுவிடும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், யாரும் குறுக்கிடக் கூடாது என்று அவர் மிரட்டல் விடுத்ததால் அனைவரும் ஒதுங்கி நின்றனர். காவலரின் மிரட்டலால் அச்சம் அடைந்த பெண்ணும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடனமாடினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த நபர்களால் செல்ஃபோனில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வீடியோ பதிவு கடந்த 2 நாட்களாக தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் மிகப் பெரிய அளவில் பரவியது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாஜகான்ப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட காவலரை இடைநீக்கம் செய்தும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மோசமான செயலில் ஈடுப்பட்ட காவலர் சைலேந்திர குமார் சுக்லா என்றும், சம்பவத்தின்போது அவர் மது அருந்தி இருந்ததும் பின்னர் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in