

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு தாக்கல் செய்தது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை சிபிஐ ஆகஸ்ட் 28, 2014-ல் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
கடந்த 25-ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில், அத்துறை சார்ந்த முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா?
இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சிபிஐ கருதாதது ஏன்?
இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என சிபிஐ ஏன் உணரவில்லை?
முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?" என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.
அதுதவிர, ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணைக் குறிப்பை சீலிடப்பட்ட உறையில் போட்டு நீதிமன்றத்த்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு தாக்கல் செய்தது.
இந்நிலையில் வழக்கை முடித்து கொள்ளும் சிபிஐயின் முடிவு மீதான விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.