சிவசேனாவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் இந்துத்வா கொள்கைக்கு நல்லது: சுப்பிரமணியன் சுவாமி

சிவசேனாவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் இந்துத்வா கொள்கைக்கு நல்லது: சுப்பிரமணியன் சுவாமி
Updated on
1 min read

“சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தால் இங்கு நிலையான அரசு அமைக்க முடியும். இந்துத்வா கொள்கைக்கும் இது நல்லது” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சந்தித்தார்.

மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் சிவசேனா பங்கேற்பது தொடர்பாக, முறைப்படியான பேச்சுவார்த்தையை பாஜக நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தால் இங்கு நிலையான அரசு அமைக்க முடியும். இந்துத்வா கொள்கைக்கும் இது நல்லது.

டெல்லி சென்ற பிறகு பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்வேன். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் சந்தித்து, இது தொடர்பாக பேசுவேன்” என்றார்.

சுவாமி மேலும் கூறும்போது, “உத்தவ் எனது நீண்டநாள் நண்பர். அவரது சிறுவயதில் இருந்தே அவரை அறிவேன். சிவசேனாவை பாஜக தனது அணியில் சேர்க்கவேண்டும். இல்லாவிடில் எதற்காக மத்திய அரசில் சிவசேனா அமைச்சர் தொடரவேண்டும்” என்றார்.

இந்த சந்திப்பின்போது சிவேசனா மூத்த தலைவர் சுபாஷ் தேசாய் உடனிருந்தார்.

இந்நிலையில் மாநில பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “சுவாமியை பாஜக அனுப்பவில்லை. இது அவரது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு” என்றார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, வெளியில் காத்திருந்த நிருபர்களிடம் அவர்கள் எதுவும் கூறாமல் சென்றனர். பிரதான், பாட்டீஸ் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை விவரங்களை டெல்லியில் கட்சித் தலைமையிடம் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என நம்பப்படுகிறது.

இதனிடையே விதர்பா பகுதியில் நேற்று பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “மகாராஷ்டிர அரசில் சிவசேனா சேரவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in