Last Updated : 14 Jul, 2019 11:48 AM

 

Published : 14 Jul 2019 11:48 AM
Last Updated : 14 Jul 2019 11:48 AM

2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்

இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2011-ம் ஆண்டு அடிப்படையில் இருந்து வரும் 2036-ம் ஆண்டில் 26 சதவீதம் உயரும். அப்போது நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இப்போது இருக்கும் அளவைக் காட்டிலும், இரு மடங்காக அதிகரிக்கும். அதேசமயம், இளைஞர்கள் எண்ணிக்கையில் சரிவு இருக்கும் என தேசிய மக்கள் தொகை ஆணையம் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் பதிவாளர் விவேக் ஜோஷி, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் ஜலானி ஆகியோர் நாடாளுமன்றத்தில் பங்கேற்ற கூட்டத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர்  கூறுகையில், "இந்தக் கணக்கெடுப்பு முதல் கட்டமானது. அனைத்துவிதமான புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வரைவு அறிக்கை தயாரித்து அனுப்பப்படும்" எனத் தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 121.10 கோடியாக இருந்த நிலையில், 2035-ம் ஆண்டில் 26.8 சதவீதம் அதிகரித்து 153.60 கோடியாக அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதுள்ள 8.6 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாக அதிகரிக்கும்.

அதேசமயம், ஆக்கப்பூர்வமான உற்பத்திக்குத் தகுதியான 25 முதல் 29 வயதுள்ள இளைஞர்கள் எண்ணிக்கை 19.0 சதவீதத்தில் இருந்து 15சதவீதமாகக் குறையும். 15 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 30.9 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகக் குறையும்.

உற்பத்தி சார்ந்த வயதுப் பிரிவான 15 முதல் 59 வயதுள்ளவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவாக 60.5 சதவீதத்தில் இருந்து 66.7 சதவீதமாக உயரும்.

அடுத்துவரும் ஆண்டுகளில் மக்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறையத் தொடங்கும். கடந்த 2011-ம் ஆண்டு 2.4 சதவீதம் இருந்த குழந்தை  பெற்றுக் கொள்ளும் வீதம், 2031-35-ம் ஆண்டில் 1.65 சதவீதமாக குறையும்.

பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதமும் குறையத்தொடங்கும். கடந்த 2011-ம் ஆண்டில் 43 சதவீதம் இருந்த இறப்பு வீதம், 15 முதல் 30 ஆகக் குறையும். நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x