அமரிந்தருடன் மோதலா?-பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

அமரிந்தருடன் மோதலா?-பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா
Updated on
1 min read

பஞ்சாப் மாநில அரசில் அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்து ராகுல் காந்திக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த மாதம் பஞ்சாப் அரசில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது சித்துவிடம் இருந்து சுற்றுலாத்துறை கலாச்சார விவகாரங்கள் பறிக்கப்பட்டன.

அதற்கு பதிலாக எரிசக்தி மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த மாதம் 10ம் தேதியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டது போன்ற கடிதத்தை சித்து தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் சித்து வெளியிட்ட பதிவில், " பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நான் ராஜினாமா செய்துவிட்டேன். ராகுல் காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன் " என்று தெரிவித்தார். 2-வது ட்விட்டில் " என்னுடை ராஜினாமா கடிதத்தை முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் அனுப்பி இருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு நவ்ஜோத் சிங் சென்று இருந்தார். அப்போது, அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டி தழுவி சித்து நட்பு பாராட்டினார். எல்லையில் இந்திய வீரர்கள் மீது  பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும்போது, அந்நாட்டு ராணுவத் தளபதியை சித்து கட்டி அணைத்தது இந்தியாவில் கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.

சித்துவின் செயலை பஞ்சாப் மாநில முதல்வரும், கேப்டன் அம்ரிந்தர் சிங்கும் கடுமையாக கண்டித்ததால் இருவருக்கும்இடையே லேசான பிளவும், உரசலும் எழுந்தது.

மக்களவைத் தேர்தலின்போது, சித்துவின் மனைவிக்கு சீட் தர முதல்வர் அமரிந்தர் சிங் சண்டிகர், அமிர்தரஸ் தொகுதியில் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையிலான பிளவு அதிகரித்தது.

கடந்த ஜுன் மாதம் 6-ம் தேதி அமைச்சரவை மாற்றப்பட்டபோது சித்துவிடம் இருந்த சுற்றுலாத்துறை, கலாச்சாரத்துறை பறிக்கப்பட்டு அதிகாரம் இல்லாத எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒதுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in