Last Updated : 14 Jul, 2019 01:15 PM

 

Published : 14 Jul 2019 01:15 PM
Last Updated : 14 Jul 2019 01:15 PM

கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் 2-ம் கட்ட பேச்சு தொடக்கம்

கர்தார்பூர் வழித்தடம் குறித்த தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள், வரைவு ஒப்புந்தம், இயக்கம் ஆகியவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான 2-ம் கட்ட பேச்சு இன்று தொடங்கியது.

அடாரி எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த  குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி காலத்தில் வாழ்ந்தார். அங்கு அவரது நினைவாக குருத்வாரா தர்பார் சாஹிப் கட்டப்பட்டுள்ளது.இந்த குருத்வாராவுக்கு செல்வதை சீக்கிய மதத்தினர் அனைவரும் தங்களது புனித கடமையாக கருதுகின்றனர்.

அந்த குருத்வாராவுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லாமல் சென்று வருவதற்கு வழிவகை செய்து தரும் வகையில், கர்தார்பூர் வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் 26-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். பாகிஸ்தான் தரப்பில் நரோவால் பகுதியில் பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டினார்.

இருதரப்பு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி ஆடாரியில் முதல்சுற்றுப் பேச்சு  நடந்தது. புல்வாமா தாக்குதல் நடந்தபின் இந்த பேச்சு நடந்ததால், அதிகமாக ஏதும் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், இருதரப்பினரும் சேர்ந்து, ஜீரோ பாயின்ட்டில் சேர்ந்து  நடத்திய  பேச்சின்போது, தொழில்நுட்ப விஷயங்கள், சாலை அமைப்பது, ராவி நதியில் வெள்ளம் வந்தால் குறுக்கே பாலம் அமைப்பது ஆகியவை குறித்து பேசப்பட்டது.

இந்திய எல்லையில் இருந்து குருதுவாரா சாஹிப் வரை பாகிஸ்தான்  பாதை அமைப்பது என்றும், பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் முதல் எல்லைப்பகுதி வரை இந்தியஅரசு சாலை அமைப்பது என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், 2-ம் கட்டபேச்சு நடத்த பாகிஸ்தான்  தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சார்க் அமைப்பின் இயக்குநர் முகமது பைசல் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

இந்தியா தரப்பிலும், 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அடாரி எல்லை வழியாக இன்று காலை 9 மணி அளவில் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றனர்.

முன்னதாக சார்க் அமைப்பின் இயக்குநர் முகமது பைசல் கூறுகையில், " கர்தார்பூர் வழித்தடத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. இந்தப் பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டு, பல விஷயங்களுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.

முதல் சுற்று பேச்சு வெற்றிகரமாக நடந்தது. 2-வது சுற்று பேச்சுக்காக ஏப்ரல் மாதம் தயாராக  இருந்தோம், இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் பிரதமர் இம்ரான் கான் உறுதியாக இருக்கிறார். குருநானக்கின் 550-வது பிறந்நதநாள் நவம்பர் மாதம் கொண்டாடப்படும் போது, இரு தரப்பு வழித்தடத்திலும் எந்தவிதமான சிக்கலும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார் " எனத் தெரிவித்தார்.

 இந்த பேச்சுவார்த்தையில் சீக்கிய பக்தர்கள் பயணம், யாத்திரை செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா எழுப்பலாம் எனத் தெரிகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x