Published : 10 Jul 2019 08:29 PM
Last Updated : 10 Jul 2019 08:29 PM

ஏமாற்றமான முடிவாக இருந்தாலும் கடைசி வரை ‘டீம் இந்தியா’ போராடியது அருமை- பிரதமர் மோடி ட்வீட்

நியூஸிலாந்துக்கு எதிரான 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி 240 ரன்கள் இலக்கை விரட்டி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி தழுவியது.

 

டாப் ஆர்டர் சொதப்பி வெளியேற 5/3 என்ற நிலையிலிருந்து ரிஷப் பந்த் (32), பாண்டியா (32) இணைந்து கொஞ்சம் மீட்டெடுக்க முயன்றாலும் ரிஷப் பந்த் தேவையில்லாத ஷாட்டுக்கு ஆட்டமிழக்க பாண்டியாவும் அத்தகைய ஒரு ஷாட்டில் ஆட்டமிழக்க 92/6 என்று இந்திய அணி தோல்வியின் முனையில் இருந்தது. அங்கிருந்து ஜடேஜா வெளுத்துக் கட்டினார், ஒரு முனையில் அவர் தன் இஷ்டத்துக்கு அதிரடி ஆட்டம் காட்டி 59 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் என்று அசத்த தோனி ஒரு முனையில் அவருக்கு உறுதுணையாக ஆட இருவரும் சேர்ந்து 116 ரன்களை சுமார் 17 ஓவர்களில் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர்.

 

ஆனால் ஜடேஜா அப்போது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டதால் அடிக்கப்போய் வெளியேற, தோனி அபாரமான ஒரு பாயிண்ட் அப்பர் கட் சிக்ஸ் அடித்து வெற்றி ஆசையை ஊதிப்பெருக்கிய நிலையில் 50 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை புவனேஷ்வர் குமாரிடம் விடக்கூடாது என்பதற்காக ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2வது ரன்னுக்கு ஓடி வந்தார், ஆனால் கப்தில் நேராக ஸ்டம்பில் அடிக்க சில இஞ்ச்களில் தோனி ரன் அவுட் ஆக சில இஞ்ச்களில் இந்திய அணி தோல்வி தழுவியது, 221  ரன்களுக்கு முடிந்தது. இறுதிக்குள் 2வது முறையாக தொடர்ச்சியாக நியூஸிலாந்து அணி நுழைந்தது.

 

இந்த ஆட்டம் குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்திய அணி கடைசி வரை போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியது அருமை. இந்தத் தொடர் முழுதும் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டது.

 

வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம். எதிர்காலத் தொடர்களில் வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

 

இவ்வாறு பதிவிட்டுள்ளார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x