

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இரவு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது.
மேற்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் 24 மணிநேரத்தில் 19 செ.மீ மழையும், குஜராத் மாநிலம் நவ்சாரியில் 12 மணிநேரத்தில் 21 செ.மீ மழையும் கொட்டித் தீர்த்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் ஜூன் 10-ம் தேதிக்கு முன்பாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளா உட்பட பிற மாநிலங்களிலும் பருவமழை தாமதமாகவே தொடங்கியது.
இதனால், இரண்டு வாரங்கள் தாமதமாக அங்கு கடந்த வாரம் பருவமழை தொடங்கியது. மும்பையில் தொடர்ந்து அங்கு மழை கொட்டித் தீர்த்த வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.
குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி செல்கின்றன. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்ளும், குடியிருப்புகளுக்குள்ம் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரும், வேலைக்குச் செல்வோரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்வே போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் மழை பெய்துள்ளது. ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.