

நாட்டில் 3 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு பிரதம அமைச்சர் கர்மயோகி மன்தந்த் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. நாட்டின் 2-வது பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது முதலாவது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
வழக்கமாக சிவப்பு நிற சூட்கேஸில் ஆவணங்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக பாரம்பரிய முறையில் துணியில் கட்டி ஆவணங்களை நிர்மலா சீதாராமன் எடுத்து வந்தார்.
நாடாளுமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
''2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக உயரும். 2024-25 ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக உயரும். இந்த அளவு பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு நாட்டின் கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்தால்தான் இலக்கை அடைய முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு அவசியம். நமது நாட்டில் மின் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் ரூ.10 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு வட்டி மானியமாக மத்திய அரசு ரூ.350 கோடி ஒதுக்கியுள்ளது.
3 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு பிரதம அமைச்சர் கர்மயோகி மன்தந்த் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக மின்சாரம், கேஸ் இணைப்பு வழங்கப்படும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.