

ராகுல் காந்தி கட்சித் தலைமை பதவியை துறந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டைப் போலவே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை 52 இடங்களில் மட்டுமே வென்றது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மே மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று (ஜுலை 3) டெல்லியில் நிருபர்கள் மத்தியில் பேசும் போது, “நான் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். நான் காங்கிரஸ் தலைவராக இல்லை” என்று தெரிவித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதையும் மாற்றிவிட்டார். தன் விளக்க கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி ராஜினாமா செய்திருப்பது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தி கட்சித் தலைமை பதவியை துறந்தது துரதிர்ஷ்டவசமானது, அவர் இல்லாதது கடினம்தான். ஒருவரது விருப்பத்துக்கு மாறாக நாம் யாரையும் கட்டிப்போட முடியாது, ஆனால் எங்கேயோ ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது... நீங்கள்தான் எப்போதும் என் தலைவர் ராகுல்ஜி.
இந்த பக்தாக்கள் எவ்வளவு குழப்பமாக உள்ளனர். ராகுல் காந்தி நிச்சயம் அவர்கள் முதுகுத்தண்டு சில்லிடும் நடுக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் இருக்கும் வரை அவர்களுக்கு பிரச்சினை இருந்தது. ஆனால் அவர் பதவியைத் துறந்த பிறகு அவர்களுக்கு இன்னும் பெரிய பிரச்சினை காத்திருக்கிறது. அந்த முட்டாள்களை எதுவும் காப்பாற்ற முடியாது.
மனசாட்சியின் படி நடந்து அதன் படி ஒரு முடிவை எடுப்பதற்கு தைரியம் வேண்டும். ஒரு உண்மையான தலைவரே, மக்கள் பற்றி உண்மையாகச் சிந்திக்கும் ஒருவர்தான் இந்த முடிவை எடுக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு துளி மரியாதைக்கும் உரியவர் என் தலைவர் என்பதை ராகுல் காந்தி மீண்டும் நிரூபித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.