Last Updated : 10 Jul, 2019 10:37 AM

 

Published : 10 Jul 2019 10:37 AM
Last Updated : 10 Jul 2019 10:37 AM

மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களைச் சந்திக்க கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு அனுமதி மறுப்பு

மும்பையில் சொகுசு ஓட்டலில் தங்கி இருக்கும் அதிருப்தி காங்கிரஸ், ஜேடியு எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தச் சென்ற கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவக்குமாருக்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

மேலும் ஓட்டலில் தங்கி இருக்கும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களும், அங்கிருக்கும் பாஜக எம்எல்ஏக்களும் சிவகுமாருக்கு எதிராக கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இதில் அமைச்சரவை யில் வாய்ப்பு கிடைக்காததால் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக் களை பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்கும் வகையில், ஒட்டு மொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதனர்.  

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜி னாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனக் கூறி அதை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

மேலும், இதில் 5 எம்எல்ஏக்களும் சாபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல் ஏக்களும் சபாநாயகரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சமாதானப் பேச்சு நடத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மும்பை சென்றார். மும்பையில் தனியார் ஒட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க சிவக்குமார் முயன்றபோது அவர்களை போலீஸார் ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் மும்பை போலீஸ் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், எங்களை சந்திக்க வரும் கர்நாடக முதல்வர் ஹெச் டி குமாரசாமி அல்லது சிவக்குமார் ஆகிய இருவரையும் சந்திக்க எங்களுக்கு விருப்பமில்லை. அவர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ஓட்டலில் தனக்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாரிடம் தெரிவித்தும் கர்நாடக அமைச்சர் சிவக்குமாரை போலீஸார் ஓட்டலுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், போலீஸாருடன் சிவக்குமார் வாக்குவாதம் செய்தும் அனுமதிக்கவில்லை. சிவக்குமார் வந்திருப்பதைப் பார்த்தவுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர், மேலும், பாஜக எம்எல்ஏக்களும் கோஷமிட்டதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கர்நாடக அமைச்சர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில் " நான் எம்எல்ஏக்களை சந்திக்காமல் இங்கிருந்து செல்லமாட்டேன். நான் எனது நண்பர்களைச் சந்திக்க இங்கு வந்திருக்கிறேன். அவர்களை ஏன் நான் சந்திக்ககூடாது.

என்னுடைய பெயரில் எந்தவிதமான அறையும் முன்பதிவு செய்யவில்லை என்று போலீஸார் கூறுகிறார்கள். ஆனால் என்னுடைய பெயரில் அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு எதிராக கோஷமிடுவது எனக்கு அச்சத்தை தருகிறது, பாதுகாப்பு காரணங்களுக்கா என்னை இங்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். மகாராஷ்டிரா அரசு மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, என்னிடம் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை. பின் நான் எவ்வாறு எம்எல்ஏக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும். அவர்கள் என்னுடைய நண்பர்கள்

பாஜகவுக்கும் இதற்கு தொடர்பில்லை என்றால், எதற்காக இவ்வளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம், ஒன்றாகவே சாகிறோம். அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்கும் போது நாங்கள் ஏன் சந்திக்கக்கூடாது " எனக் கேள்வி எழுப்பினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x