Last Updated : 03 Jul, 2019 12:00 AM

 

Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM

கர்நாடக அரசை கவிழ்க்க அமித் ஷா முயற்சி செய்கிறார்: சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் கடந்த ஓராண்டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அமைச்சரவை பங்கீட்டு விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஆனந்த் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான‌ சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடந்த ஓராண்டாக பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு சதி வேலைகளை செய்துள்ளனர். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் பாஜகவே காரணம். இந்த முறை கூட்டணி அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடியாகவே முயன்று வருகிறார். தற்போது 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததற்கும் அவரே காரணம். பிரதமர் மோடிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. எங்களது எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். இந்த முறையும் பாஜகவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக மறுப்பு

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியபோது, '' காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர்களே சொல்லி இருக்கும்போது, சித்தராமையா பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை எங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசிய‌ம் பாஜகவுக்கு இல்லை. குமாரசாமி மீதான‌ அதிருப்தியின் காரணமாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்'' என்றார்.

மஜத மறுப்பு

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கருத்து குறித்து மஜதவை சேர்ந்த அமைச்சர் ஜி.டி.தேவகவுடா கூறியபோது, ''காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு காங்கிரஸார்தான் காரணம். மோடியும், அமித் ஷாவும் காரணம் இல்லை. சித்தராமையாவின் இந்த கருத்தை நான் ஏற்க மாட்டேன். மோடியும், அமித் ஷாவும் நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும் என சிந்தித்து கொண்டிருப்பார்கள். மோடி வெளிநாடுகளுக்கு பயணிப்பதிலும், அமித் ஷா காஷ்மீர் விவகாரத்திலும் மும்முரமாக இருக்கிறார்கள். எனவே கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சிக்க மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் கருத்தை கூட்டணி கட்சியின் மூத்த‌ தலைவரே மறுத்துள்ளதால், காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x