Last Updated : 11 Jul, 2019 08:25 AM

 

Published : 11 Jul 2019 08:25 AM
Last Updated : 11 Jul 2019 08:25 AM

கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டத்தால் பரபரப்பு: ஆளுநர், பேரவை தலைவருடன் எடியூரப்பா சந்திப்பு

கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜகவினரும், ஆபரேஷன் தாமரையை கண்டித்து காங்கிரஸாரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 13 பேர் பாஜகவினரின் பாதுகாப்பில் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். பாஜகவின் ‘ஆப்ரேஷன் தாமரை’யே இதற்குக் காரணம் என முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் பாஜகவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது தேவகவுடா பேசும்போது, “என் 60 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான சூழலை பார்த்ததில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக மிகவும் மோசமான அரசியலை செய்து வருகிறது. நீதியை நிலைநாட்ட நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

பாஜக போட்டி போராட்டம்

இதனிடையே குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பாஜக மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் எடியூரப்பா தலைமையில் பேரணியாக சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்ற பாஜக எம்எல்ஏக்கள், காந்தி சிலைக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா பேசும்போது “இதுவரை 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். ஆனால் பேரவைத் தலைவர் அதை ஏற்காமல் இருக்கிறார். அவரது இந்த செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பெரும்பான்மையை இழந்துள்ள குமாரசாமி உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பேரவை தலைவர் ரமேஷ் குமாரை சந்தித்து, அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு வலியுறுத்தினர். இதன் பிறகு ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x