

சமூக ஊடகங்களில் வதந்திகள், பொய் செய்திகள், மோசமான வார்த்தைகள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
சமூக ஊடகங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும், வதந்திகளும் பரப்பி விடப்படுகின்றன. இந்த வதந்தியை நம்பி நாட்டின் பல்வேறு நகரங்களில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து, மத்திய அரசு தலையிட்டதன் பேரில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை வதந்திகளை தடுக்க நடவடிக்கை எடுத்தன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சங் பேசினார். அதில், "சமூக ஊடகங்களில் பரப்பி விடப்படும் வதந்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், சமூகத்தில் மக்களிடையே பிளவையும் ஏற்படுத்துகின்றன. வதந்திகள், போலிச் செய்திகள் குறித்த ஆய்வில் தீவிரவாதத்தைக் காட்டிலும் வதந்திகள் ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்கள், தனிமனிதர்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள், கருத்துகள், போலிச் செய்திகள் சிலநேரங்களில் கலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடுகிறது.
ட்விட்டரில் புகழ்பெற்ற விஐபிக்களை பின்பற்றுபவர்கள் கூட சில நேரங்களில் உண்மையை ஆய்வு செய்யாமல், போலிச் செய்திகளை வெளியிடுகிறார்கள். இதைத் தடுக்க முழுமையான சட்டம் கொண்டு வருவது அவசியம் " என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "நீங்கள் எழுப்பி இருக்கும் பிரச்சினை முக்கியமானது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதால், கருத்தொற்றுமை அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதிமுக எம்.பி. கோகுல கிருஷ்ணன் பேசுகையில், "மத்திய அரசின் 48 பல்கலைக்கழகங்களிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த விஷயத்துக்கு கடந்த 2013-14-ம் ஆண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒப்புதல் அளித்தும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை" எனத் தெரிவித்தார்
பாஜக எம்.பி. விஜய் சஹாஸ்ரபுத்தே பேசுகையில், "ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். சீனாவில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகளில் ரத்தம் என்பதே இருக்காது. ஆஸ்திரேலிய அரசு 220 ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்துள்ளது. தென் கொரியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சில குறிப்பிட்ட விளையாட்டுகளை விளையாட முடியாது. ஆதலால், குழந்தைகளின் எதிர்காலம் கருதி, சில வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.