

நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 4 ஆயிரத்து 800 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்து பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு ஏறக்குறைய 24ஆயிரத்து 698 இடங்கள் அதிகரிக்கபட்டுள்ளன. கடந்த 2017-18ம் ஆண்டில் இளநிலை பிரிவில் 15,815 இடங்களும், முதுநிலைப் பிரிவில் 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2019-20 ஆண்டில் 10,565 இடங்களும், முதுநிலைப்பிரிவுக்கு 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீ்ட் நுழைவுத் தேர்வுமூலம் வரும் மாணவர்களுக்கு 75 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்காக நடப்பு கல்வி ஆண்டில் 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் கண்டிப்பாக முதுநிலை படிப்புகளை அங்கீகாரம்வழங்கப்பட்ட அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஹர்ஸ் வர்தன் பேசினார்
மற்றொரு கேள்விககு ஹர்ஸ் வர்த்ன் பேசுகையில் " சில மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சந்தை விதிமுறைகளுக்கு மாறாக நடக்கிறார்கள் என்ற புகார்கள் வந்துள்ளன. அதாவது, மருத்துவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தல், பணம் அளித்தல், விடுமுறைக்கு சுற்றுலாத்தளங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றை செய்கிறார்கள். இதுபோன்ற நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைக்கு மருந்து நிறுவனங்களும், அவற்றின் தலைமை அதிகாரிகளுமே பொறுப்பு.
இந்திய மருத்துவக் கவுன்சில் ஒழுங்குமுறைச் சட்டம் 2000-ன்படியும் ஒழுங்குவிதிகளின்படியும், மருத்துவர்களுக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் இருக்கும் உறவு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசுப்பொருட்களைப் பெறுதல், பணம் பெறுதல், சுற்றுலா பேக்கேஜ்கள் போன்றவற்றை பெறக்கூடாது.
இதுபோன்ற விதிமுறைகளை, நெறிமுறைகளை மீறி செயல்படும் மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவக் கவுன்சில் தகுந்த தண்டனை வழங்கும். மருத்துவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் வந்தால், அவை, இந்திய மருத்துவக் கவுன்சில், மாநில மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.