பாஜகவுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியில் இருந்து சுயேச்சை எம்எல்ஏ விலகல்: கர்நாடகாவில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்தது

பாஜகவுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியில் இருந்து சுயேச்சை எம்எல்ஏ விலகல்: கர்நாடகாவில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்தது
Updated on
1 min read

கர்நாடக அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக ஆளும் கூட்டணியை ஆதரித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்றது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ், மஜத‌வைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள சோபிடெல் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்ற முதல்வர் குமாரசாமி நேற்றிரவு அவசரமாக பெங்களூரு திரும்பினார். உடனடியாக அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிருப்தி எம்எல்ஏக்களை சமரசம் செய்ய அவர் முயற்சி எடுத்து வருகிறார்.

சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க குமாரசாமி முன் வந்துள்ளார். இதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்கள் சிலரை பதவி விலக செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளார். ஆனால் இந்த சமரச திட்டத்தை ஏற்க அதிருப்தி எம்எல்ஏக்கள் மறுத்து விட்டனர்.

இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை மழைகால கூட்டத்தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்க வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரச்சினையால் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்தி வைக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் மேலும் ஒரு திருப்பமாக ஆளும் கூட்டணியை ஆதரித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.

பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியின் பலம் 104 ஆக குறைந்தது. அதேசமயம் பாஜக அணியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரும்பான்மை பெற 105 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in