Last Updated : 01 Jul, 2019 07:23 PM

 

Published : 01 Jul 2019 07:23 PM
Last Updated : 01 Jul 2019 07:23 PM

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் தொடர்வார்: அசோக் கெலாட் நம்பிக்கை

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர்வார் என நம்புகிறோம். எங்களின் கோரிக்கையை பொறுமையாகக் கேட்டதால் நல்லமுடிவு எடுப்பார் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்றது. இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

ஆனால், ராகுல் காந்தி பிடிவாதமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருந்து வருகிறார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்கக் கோரி பல்வேறு மாநிலத் தலைவர்கள், தேசிய அளவில் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் இதுவரை 200 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த சூழலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இன்று ராகுல் காந்தியை சந்தித்துப் பேச முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநில முதல்வர்கள் இன்று பிற்பகலுக்குப் பின் ராகுல் காந்தியை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு ஏறக்குறைய 2 மணிநேரம் நடந்தது. ராகுல் காந்தியுடன் தேர்தல் தோல்விகள், தோல்விக்கான காரணம், அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ராகுல் காந்தியுடன் கடந்த 2 மணிநேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நல்லவிதமாக இருந்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரின் விருப்பங்கள், உணர்வுகளை எடுத்துக்கூறி, கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கக் கோரினோம். எங்கள் கோரிக்கையை ராகுல் காந்தி பொறுமையாகக் கேட்டார். தொடர்ந்து தலைவராகத் தொடர்வார் என நம்புகிறோம்.

தேர்தல் தோல்வி குறித்தும், காரணங்கள் குறித்தும் நாங்கள் ராகுலுடன் ஆலோசித்தோம். தேர்தல் தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்போம் என்று கூறினோம்.

சாமானிய மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் பிரதமர் மோடியும், ஆளும் பாஜகவும், தேசியவாதம், ராணுவம், மதம் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றின் பின் மறைந்துகொண்டு தேர்தலைச் சந்தித்தார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி சரியான தலைவராக இருந்தார். இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு  அவரால் மட்டுமே சரியான தலைமையை வழங்க முடியும். நாட்டின் நலனுக்காக கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.

2019-ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள், கொள்கைகள், சித்தாந்தம் ஆகியவற்றுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. அவை தோற்கடிக்கப்படவும் இல்லை''.

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x