Last Updated : 11 Jul, 2019 10:12 AM

 

Published : 11 Jul 2019 10:12 AM
Last Updated : 11 Jul 2019 10:12 AM

கோவா அரசியலில் திடீர் திருப்பம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்; எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்தார்

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கோவாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் நேற்று தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

கோவாவில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. இப்போது காங்கிரஸ் கட்சியின் பலம் 5ஆகக் குறைந்துள்ளது.

ஒரு கட்சியில் இருந்து மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் வேறுஒரு கட்சியில் இணைந்தால், அவர்களை கட்சித் தாவல்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது. ஆதலால், இவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் பாயாது.

கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரகாந்த் காவ்லேகர் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் நேற்று இரவு சபாநாயகர் ராஜேஷ் பட்நேகரைச் சந்தித்து தாங்கள் காங்கிரஸ் கட்சியில்இருந்து பிரிந்து பாஜகவில் இணைய முடிவு செய்திருப்பதாக கடிதம் அளித்தனர்.

இதன்படி, எம்எல்ஏக்கள் அடானாசியோ மான்செராட்டே, ஜெனிஃபர் மான்செராட்டே, பிரான்சிஸ் சில்வியரா, பிலிப் நெரி ரோட்ரிக்ஸ், கிளியோபேசியோ டயாஸ், வில்பிரட் டா, நில்கந்த் ஹல்ரன்கர், இஸ்தர் பெர்னான்டஸ் ஆகியோர்  பாஜகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தபோது கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடன் இருந்தார்.

இப்போது சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் கோவா ஃபார்டு கட்சி, சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர், என்சிபி மற்றும் எம்ஜிபி கட்சியில் இருந்து தலா ஒரு எம்எல்ஏ ஆகியவற்றுடன் சேர்த்து 27 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த சந்திரகாந்த் காவ்லேகர் கூறுகையில், " அமைச்சரவையில் இணையும் திட்டம் ஏதும் இல்லை.இன்னும் சில எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருக்கிறார்கள். முதல்வர் சாவந்த் பணியாற்றும் விதம் சிறப்பாக இருக்கிறது, மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார் அவருடன் இணைந்து செயலாற்றவே நாங்கள் விரும்பினோம். எதிர்க்கட்சியாக இருக்கும்வரை நம்முடைய வளர்ச்சி பாதிக்கத்தான் செய்யும். எந்தவிதமான நிபந்தனையும் இன்றி நாங்கள் பாஜகவில் இணைந்தோம் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x