Last Updated : 11 Jul, 2019 04:52 PM

 

Published : 11 Jul 2019 04:52 PM
Last Updated : 11 Jul 2019 04:52 PM

பதவி ஓய்வுபெறும் முன் பிரதமர் மோடியை சந்தித்த மைத்ரேயன்: அலுவலர்களுடன் புகைப்படம்

மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான மைத்ரேயன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவரது வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி, நாடாளுமன்ற அதிமுக அலுவலர்களுடன் படம் எடுத்துகொண்டார்.

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் டாக்டர்.மைத்ரேயன். தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கிடைத்தது போல் மூன்றுமுறை எம்.பி பதவி இதுவரை அதிமுகவில் எவருக்கும் கிடைக்கவில்லை.

மைத்ரேயனின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சுமார் பதிநான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர்.

இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. இதனால், மாநிலங்களவையில் இருந்து விடைபெறுவதை முன்னிட்டு மைத்ரேயன் இன்று பிரதமர் மோடியை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது தனக்கு மாநிலங்களவை செயல்பாடுகளுக்கு உதவிய நாடாளுமன்ற அதிமுக அலுவலக அலுவர்களையும் உடன் அழைத்துச் சென்றார். பிரதமருக்கு பொன்னாடை போர்த்திய பின் அவரது சிறப்பு அனுமதி பெற்று இருவரையும் புகைப்படம் எடுக்க வைத்துள்ளார் மைத்ரேயன்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மைத்ரேயன் கூறும்போது, ‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவின்  குரலாக நான் இதுவரை ஒலித்து வந்தேன். நான் ஓய்வுபெறுவதை முன்னிட்டு இன்று காலை பாரதப் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

அப்போது, அதிமுக நாடாளுமன்ற அலுவலர்கள் பிரதமருடன் படம் எடுத்துக்கொள்ள விரும்புவதை தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பிரதமரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது.’ எனத் தெரிவித்தார்.

அதிமுக அலுவலக செயலாளராக என்.சந்திரசேகரன் 35 ஆண்டுகளாகவும், துணை செயலாளராக எஸ்.பாண்டியன் 20 ஆண்டுகளாகவும் டெல்லியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரையும் சந்திக்க சம்மதித்த பிரதமர் மோடி, ’எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? என அன்புடன் விசாரித்திருக்கிறார்.

இதுபோன்ற ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற அலுவலக அலுவலர்களுடன் பிரதமர் அதிகாரபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு முதன்முறை எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x