

பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். விவாதங்களில் பங்கேற்க வேண்டும். பாஜகவினர் தங்கள் மோசமான நடத்தையால் கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடாது’’ என பிரதமர் மோடி பேசினார்.
17-வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்து உள்ளது. மக்களவைத் தேர்தலுக்குபின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 5-ந் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. 26-ம் தேதி வரை மழைகால கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மாநிலங்களவை பாஜக எம்.பி. மதன்லால் சைனி மரணமடைந்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக வெற்றிக்கு பெரும் பங்காற்றிய கட்சித் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் அவையில் பாஜக எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டிய அம்சங்கள், எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘‘பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். விவாதங்களில் பங்கேற்பதுடன், தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். பாஜக நிர்வாகிகள் தங்கள் மோசமான நடத்தை மூலம் கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடாது’’ எனக் கூறினார்.
பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியாவின் மகன் ஆகாஷ் அரசு அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.