Published : 13 Jul 2019 08:53 AM
Last Updated : 13 Jul 2019 08:53 AM

தெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்; தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம் தங்க நகைகள் சிக்கின

தெலங்கானாவில் சிறந்த தாசில்தார் விருது பெற்ற ஒருவர், லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். இவது வீட்டிலிருந்து ரூ. 93.5 லட்சம் ரொக்கம் மற்றும் 400 கிராம் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டம், கேஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் வி.லாவண்யா. இவரது அலுவலகத்தில் கிராம வருவாய் அதிகாரியாக பணியாற்றும் அந்தையா என்பவர், சமீபத்தில் விவசாயி ஒருவரிடம் மூலப்பத்திரத்தை மாற்றி அமைக்க ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், தாசில்தார் லாவண்யாவுக்கு ரூ.5 லட்சமும் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் தரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தையாவிடம் ரூ. 4 லட்சம் ரொக்கத்தை விவசாயி கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தாசில்தார் லாவண்யாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தீவிர விசாரணை

தாசில்தார் அலுவலகம் மற்றும் ஹைதராபாத், ஹயாத் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 93.5 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் மற்றும் சில பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாவண்யா, கடந்த 2017-ல் சிறந்த தாசில்தார் விருது பெற்றுள்ளார். தெலங்கானா துணை முதல்வரிடம் இருந்து அவர் விருது பெறும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கெஞ்சிய விவசாயி

இதனிடையே பாஸ்கர் என்ற விவசாயி தனக்கு வழங்கப்பட்ட பட்டா பாஸ் புத்தகத்தில் உள்ள பிழைகளை திருத்தித் தரும்படி தாசில்தார் லாவண்யாவிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லாததால், அவரது காலில் விழுந்து கெஞ்சும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x