Last Updated : 09 Jul, 2019 04:32 PM

 

Published : 09 Jul 2019 04:32 PM
Last Updated : 09 Jul 2019 04:32 PM

கடந்த 2 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளிடம் ரூ.1059 கோடி நன்கொடை பெற்ற 6 தேசியக் கட்சிகள்

2016-ம் ஆண்டுமுதல் 2018-ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 6 தேசியக் கட்சிகள் பெற்ற ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடையில் 93 சதவீதம், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும், வர்த்தக நிறுவனங்களிடம் பெற்றது தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1059 கோடி தாமாக முன்வந்து நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.915.59 கோடி நன்கொடை வந்துள்ளது என ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை 6 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடையில் 93 சதவீதம் கார்ப்பரேட்டுகளிடம் இருந்துதான் கிடைத்தது.  கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1059 கோடி தாமாக முன்வந்து நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் 1,731 கார்ப்பரேட்டுகளிடம் இருந்து ரூ.915 கோடி நிதி பெற்றுள்ளது.

151 கார்ப்பரேட்டுகளிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ரூ.55.36 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 23 நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.7.74 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

கடந்த 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் மட்டும் பாஜக தாமாக முன்வந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக 94 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 81 சதவீதம் பேரும் நன்கொடை அளித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் 2 சதவீதம் நன்கொடை அளித்துள்ளனர்.

2012-13 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தரப்பில் வழங்கப்பட்ட ரூ.2,123 கோடி நன்கொடையில் ரூ.1,941.95 கோடி அதாவது 91.17 சதவீதம் நன்கொடை வந்த மூல விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 2014-15 ஆம் ஆண்டு தேசியக் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் தரப்பில் ரூ.573.18 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2016-17 ஆம் ஆண்டில் ரூ.563.19 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.421.99 கோடியும்  நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசியக் கட்சிகளுக்குச் சென்ற நன்கொடை அளவு 414 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது.

2012-13 முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை கார்ப்பரேட்களிடம் இருந்து அதிகபட்சமாக பாஜக தரப்பில் ரூ.1,621.40 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. அதாவது நன்கொடையில் 83.94 சதவீதம் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ், பாஜகவுக்கு அதிகபட்சமாக புருடன்ட் சத்யா எல்க்டோரல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை அதிகபட்சமாக நன்கொடை அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 46 முறை ரூ.429.42 கோடி அளவுக்கு நன்கொடை அளித்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 33 முறை நன்கொடை வழங்கியது. அதன் மதிப்பு ரூ.405.52 கோடியாகும். காங்கிரஸ் கட்சிக்கு 13 முறை நன்கொடை வழங்கியதன் மதிப்பு ரூ.23.90 கோடியாகும்.

பத்ராம் ஜன்ஹிட் அறக்கட்டளை அதிகபட்சமாக கார்ப்பரேட் நன்கொடை வழங்கியது. காங்கிரஸ்,  பாஜகவுக்கு சேர்ந்து ரூ.41 கோடி வழங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் இருந்து நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் ரூ.49.94 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையினர் சார்பில் ரூ.74.74 கோடியும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதில் எலெக்டோரல் டிரஸ்ட் அமைப்புகளிடம் இருந்து பாஜக அதிகபட்சமாக ரூ.458.02 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.29.40 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பாஜக ரூ.107.54 கோடியும், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ88.57 கோடியும், சுரங்கப் பணி, ஏற்றுமதி இறக்கு தொழில் செய்பவர்களிடம் இருந்து ரூ.57.40 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது''.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x