Last Updated : 12 Jul, 2019 12:41 PM

 

Published : 12 Jul 2019 12:41 PM
Last Updated : 12 Jul 2019 12:41 PM

பள்ளிக் கட்டணம் நிலுவையில் இருந்தாலும் மாணவருக்கு டி.சி. தரமறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கட்டணம் நிலுவையில் இருப்பதால், மாணவருக்கு டி.சி.(மாற்றுச்சான்றிதழ்) தரமுடியாது என்று பள்ளி நிர்வாகம் மறுக்க முடியாது டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கார்த்திக்(வயது9) மற்றும் பிரியான்ஷ்(வயது5). கார்த்திக் 3-ம் வகுப்பிலும், பிரியான்ஷ் எல்கேஜியும் படிக்கின்றனர்.

இருவரையும் வேறுபள்ளிக்கு மாற்ற அவர்களின் பெற்றோர் முடிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் மாற்றுச்சான்றிதழ்(டிசி) கேட்டனர்.

அதற்கு பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் ரூ.ஒரு லட்சம் நிலுவையில் இருப்பதால், டிசி தரமுடியாது. கல்விக்கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே டிசி  தரமுடியும் என்று கூறி மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த கடிதத்ததை இணைத்து மாணவர்களின் பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தங்கள் குழந்தைகளுக்கு டிசி வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரினார்கள்.

இந்த வழக்கிற்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் அசோக் அகர்வாலை நியமித்த நீதிமன்றம், நிலையை ஆய்வு செய்ய அனுப்பியது. அசோக் அகர்வால் வாதிடுகையில், " டெல்லி பள்ளிகல்விக்சட்டம் 1973- விதிஎண் 167ன் கீழ் ஒரு பள்ளியின் நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தாவிட்டால், மாணவரின் பெயரை பள்ளியின் பதிவேட்டில் இருந்து நீக்குவதற்குதான் உரிமை இருக்கிறது. ஆனால், மாணவரின் மாற்றுச்சான்றிதழை வழங்க முடியாது என்று தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, டி.என்.பாட்டீல் பிறப்பித்த உத்தரவில்  "கல்விக்கட்டணம் நிலுவையில் இருப்பதாகக் கூறி ஒரு பள்ளி மாணவருக்கு அவரின் மாற்றுச் சான்றிதழை நிறுத்திவைக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு எந்தவிதமான உரிமையும், அதிகாரமும் இல்லை.

இன்னும் ஒரு வாரத்துக்குள் இரு குழந்தைகளுக்கும் டி.சி.யை வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடுகிறோம். அதன்பின் டிசி வழங்கப்பட்டதற்கான சான்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x