Published : 03 Jul 2019 04:47 PM
Last Updated : 03 Jul 2019 04:47 PM

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளிவரும் மாநில மொழிகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடும் திட்டத்தில் , மாநில மொழிகளில் தமிழ் மொழி முன்னுரிமையில் இருக்கிறது என்று  நீதிமன்ற வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வெளியிடும் தீர்ப்புகளை அனைத்து மாநிலங்களில் உள்ள மக்களும் தங்களின் மாநில மொழிகளில் தெரிந்து கொள்ள மொழியாக்கம் செய்து வெளியிடும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கையாண்டு வருகிறது. இதற்காக புதிதாக மென்பொருள் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடுவது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் சிந்தனையில் உருவான முக்கியமான திட்டமாகும்.

இதற்கான அப்ளிகேஷன் இந்த மாதம் மத்தியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் எவ்வாறு மொழிபெயர்க்கிறதோ அதேபோன்று இருக்கும் அந்த அப்ளிகேஷனை அனைத்து மாநில மொழிகளிலும் ஒரே கட்டத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், " இந்த திட்டம் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களின் உதவியால் வெற்றி அடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா அப்பு கார் பகுதியில் விரைவில் நடக்க உள்ளது. அன்றைய தினம், இந்த புதிய அப்ளிகேஷனின் அறிமுகம் இருக்கும். அந்த விழாவுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வரஉள்ளார் " எனத் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பத்திரிகையாளர்களுடன் பேசியுள்ளார். அப்போதுதான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடும் திட்டத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசுகையில், " தீர்ப்புகளை இந்தியில் மட்டுமல்லாது, அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும், தீர்ப்புகளின்  சுருக்கத்தையும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவது நீண்டகாலமாக வழக்குக்காக காத்திருந்து போராடும் மனுதாரருக்கு உதவும். குறிப்பாக ஆங்கிலம் தெரியாமல், தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கும் மனுதாரருக்கு இந்த திட்டம் நன்கு உதவும் " என்று  தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரசமைப்புச் சட்டநாள் கொண்டாடப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயின், இந்த திட்டத்தை பாராட்டிப் பேசினார். குறிப்பாக தீர்ப்புகளை மாநில மொழிகளுக்கு ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து அளிப்பது சிறந்த திட்டம் என்று புகழாரம் சூட்டினார்.

மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழியாக்கம் செய்து வழங்கப்படுவதில் தமிழ்மொழியில் இல்லை என்ற தகவல் வெளியானது. ஆனால், தமிழ்மொழியை கட்டாயம் சேர்க்க வேண்டும் எனக் கோரி திமுக தலைவர் முக ஸ்டாலின் பாமக கட்சித் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வட்டாரங்கள் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மாநிலமொழிபெயர்க்கும் திட்டத்தில் தமிழ்மொழிக்குத்தான் முன்னுரிமை இருக்கிறது" என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x