Published : 11 Jul 2019 06:30 PM
Last Updated : 11 Jul 2019 06:30 PM

கர்நாடக சபாநாயகர் அலுவலகத்துக்குள் செல்ல பாஜகவினர் முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸார்

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் சபநாயகர் முன்பு ஆஜராக தயாராகி வரும்நிலையில், திடீரென பாஜகவினர் அங்கு வந்ததனர். அவர்கள் சபாநாயகர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனவும், அதை ஏற்க முடியாது எனவும் கூறி நிராகரித்து விட்டார்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரபபு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பெங்களூரு திரும்பியுள்ளனர். அவர்கள் சபநாயகரை சந்திக்க உள்ளனர். அவர்கள் வருகைக்காக சட்டப்பேரவை அலுவலகத்தில் சபாநாயகர் காத்திருக்கிறார். இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு திடீரென சட்டப்பேரவைக்குள் வந்தது.

சபாநாயகரை சந்திக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை சந்திக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களை சமாதானம் செய்து வெளியேறுமாறு வேண்டிக்கொண்டனர்.

சபநாயகர் அலுவலகத்துக்குள் அவர்கள் செல்ல முற்பட்டனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x