Last Updated : 02 Jul, 2019 09:27 AM

 

Published : 02 Jul 2019 09:27 AM
Last Updated : 02 Jul 2019 09:27 AM

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: விடுமுறை அறிவிப்பு: 19 பேர் பலி: 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன, ரயில் சேவை ரத்து

மும்பையில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்தது விழுந்ததில் 13 பேரும், புனேயில் கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்ததில் 6 பேர் என மொத்தம் 19 பேர் பலியானார்கள். கனமழையால் விமானம், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன.

தென் மேற்கு பருவமழையால் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 400 செ.மீ மழை பெய்ததால், நகரின் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், மும்பை- தானே இடையிலான புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்கலில் ரயில் இருப்புபாதையை மூழ்கி இருப்பதால், ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தானே-குர்லா புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களில் இருக்கும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து மும்பை வரும் ரயில்களும் வேறு வழியின்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த ரயில்கள் எங்கு திருப்பப்படும் எனும் விவரம் தெரியவில்லை.

மும்பை  சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதை நீரில் மூழ்கி இருப்பதால், விமான சேவையும் தரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சாலைப் போக்குவரத்து தொடர்ந்து 2-வது நாளாக முடங்கியுள்ளது. சுரங்கப்பாதைகள், சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ந்துள்ளதால், அந்தேரி, ஜோகேஸ்வரி, வில்லே பர்லே , தாசிகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதி அரசு இன்று மும்பை நகருக்கு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புறநகரின் மாலட் பகுதியில் உள்ள பிம்ரிபாடாவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து13 பேர் பலியானார்கள்.

இன்று அதிகாலை பிம்பிரிபாடா பகுதியில் சாலைஓரம் வசித்து வந்தவர்கள் மீது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியானார்கள் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புனேயில் உள்ள அமேகான் பகுதியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்து இன்று அதிகாலை விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். புனேயில் உள்ள சிங்காட் இன்ஸ்டியூட்டில் கட்டிடப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் தங்கி இருந்த அறையின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது இதில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்து தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி இருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக தீயணைப்பு படையினர் சேர்த்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x