Last Updated : 13 Jul, 2019 08:06 AM

 

Published : 13 Jul 2019 08:06 AM
Last Updated : 13 Jul 2019 08:06 AM

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் இணைகிறதா மஜத?- அமைச்சர் சா.ரா.மகேஷ் முரளிதர ராவை சந்தித்ததால் பரபரப்பு

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலையில், மஜத மூத்த தலைவர் சா.ரா. மகேஷ் பாஜக மேலிடத் தலைவர் முரளிதர ராவை சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்துள்ள குமாரசாமி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸாரும், மஜதவினரும், பாஜகவின் ஆபரேஷன் தாமரையின் காரணமாகவே தங்களது எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவினர்பணம் மற்றும் பதவி ஆசைக்காட்டி த‌ங்களது எம்எல்ஏக்களை அவர்கள் பக்கம் இழுத்துவிட்டதாக கூறி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முதல்வர் குமாரசாமியும் பாஜகவை நேரடியாக விமர்சிக்காமல் அமைதி காக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மஜத மூத்த தலைவரும், அமைச்சருமான சா.ரா.மகேஷ் நேற்று முன்தினம் இரவு பாஜக கர்நாடக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோரை சந்தித்து பேசினார். பெங்களூருவில் உள்ள குமாரகுருபா விருந்தினர் மாளிகையில் சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், பாஜக ஆட்சி அமைக்க மஜத ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

முதலில் இந்த சந்திப்பை மஜதவும், பாஜகவும் திட்டவட்டமாக மறுத்தன. சமூக வலைதளங்களில் சா.ரா. மகேஷ் குமாரகுருபா விருந்தினர் மாளிகையில் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதும் சந்தித்ததை ஒப்புக்கொண்டன. பாஜக தரப்பில் மஜதவுடன் கூட்டணி குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள‌து.

சா.ரா.மகேஷ் பாஜக தலைவர்களை சந்தித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், பாஜகவுடன் மஜத கூட்டணி சேர முயற்சிக்கிறதா என சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதற்கு முரளிதரராவ், ''மஜத அமைச்சர் சா.ரா.மகேஷை பொது இடத்திலே சாதாரணமாகத் தான் சந்தித்து பேசினேன். இதனை ஊடகங்கள் பரபரப்பான செய்தியாக மாற்ற வேண்டாம்'' என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் குமாரசாமி, “சா.ரா.மகேஷ் பாஜக த‌லைவர்களை தற்செயலாகத் தான் சந்தித்தார். குமாரகுருபா விருந்தினர் மாளிகை சுற்றுலா துறைக்கு உட்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் அங்கு செல்வதில் என்ன தவறு இருக்கிறது?''என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தரம்சிங் தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிநடைபெற்றது. அப்போது குமாரசாமி காங்கிரஸூக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்று, திடீரென பாஜகவை ஆதரித்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் எடியூரப்பாவுடன் கூட்டணி சேர்ந்து குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக ஓராண்டை நிறைவு செய்த நிலையில், எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி

வழங்க மறுத்து ஆட்சியை கலைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x