Published : 06 Jul 2019 07:13 AM
Last Updated : 06 Jul 2019 07:13 AM

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; பெட்ரோல், டீசல், தங்கம் மீது கூடுதல் வரி; ஜிஎஸ்டியை எளிமையாக்க திட்டம்; வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் வரிச்சலுகை

நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்படி தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட சில பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு பிரதமராக இருந்த இந்திரா காந்தி நிதியமைச்சக பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு 2019-20 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இது இவருக்கு முதல் பட்ஜெட் ஆகும். மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 2-வது பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் மத்திய பட்ஜெட்டான இதில் கூறியிருப்பதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சாலை வரி (செஸ்) லிட்டருக்கு தலா ரூ.2 உயர்த்தப்படும்.

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான சுங்க வரி 10-லிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும். இதுபோல, டைல்ஸ், முந்திரி பருப்பு, வினைல் புளோ ரிங், வாகன உதிரிபாகங்கள், சில சிந்தெடிக் ரப்பர் வகைகள், டிஜிட்டல் மற்றும் வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி உயர்த்தப்படும்.

65 மி.மீ.க்கு அதிக நீளம் கொண்ட 1,000 சிகரெட்களுக்கு உற்பத்தி வரியாக ரூ.5-ம், வாயில் மெல்லும் புகையிலை, எஸன்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு 0.5 சதவீத வரியும் விதிக்கப்படும்.

வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், இடைக்கால பட்ஜெட்டின்படி ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது.

இதுபோல, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்களுக்கு 3 சதவீதமும் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டு பவர்களுக்கு 7 சதவீதமும் கூடுதல் வரி விதிக்கப்படும்.

2014-ல் 1.85 ட்ரில்லியன் டாலராக (ரூ.127.6 லட்சம் கோடி) இருந்த இந்தியப் பொருளாதாரம் இப்போது 2.7 ட்ரில்லியன் டாலராக (ரூ.186.3 லட்சம் கோடி) உயர்ந் துள்ளது. இதை அடுத்த சில ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலராக (ரூ.345 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்கான சாத்தியம் உள்ளது.

ரூ.400 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30-லிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். இதன்மூலம் 99.3 சதவீத நிறுவனங்கள் பயனடையும். இப்போது ரூ.250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

சொந்த வீடு வாங்கி அதில் குடியிருப் போர் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டி யில் ரூ.2 லட்சம் வரை வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இனி கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை அதாவது வீட்டுக் கடன் வட்டியில் ரூ.3.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை வழங்கப்படும். எனினும், 2020 மார்ச் 31-க்குள் வாங்கப்படும் ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வீடுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்கு விப்பதற்காக, விமானப் போக்குவரத்து, ஊடகம், அனிமேஷன் மற்றும் காப்பீடு ஆகிய துறைகளுக்கான முதலீட்டு உச்சவரம்பை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

ரொக்கமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.50 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பீம், யுபிஐ, ஆதார் பே, என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

மின்சார வாகனங்கள்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக, இத்தகைய வாகன கடன்களுக்கு செலுத்தும் வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதலாக வரி விலக்கு வழங்கப்படும். மேலும் இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12-லிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வாகனங்களுக்கான உதிரிபாக இறக்கு மதிக்கான சுங்க வரியும் குறைக்கப் பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளுக்கு மறு முதலீடாக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

வேளாண்துறைக்கு ரூ.1.39 லட்சம் கோடிவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது கடந்த ஆண்டைவிட 78 சதவீதம் அதிகம். இந்தத் தொகை யில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்காக மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி செலவிடப் படும்.

ஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தப்பட்டு  மாதத்துக்கு ஒருமுறை மட்டும் தாக்கல் செய்யக்கூடிய நடைமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆண்டு விற்பனை ரூ.5 கோடிக்கு கீழ் இருப்பவர்கள் காலாண்டு ரிட்டர்னை தாக்கல் செய்தால் போதும். ஜிஎஸ்டி ரிஃபண்ட் முழுமையான தானி யங்கு முறையின் மூலம் செயல்படுத் தப்படும்.

2024-க்குள் அனைவருக்கும் குடிநீர்பிரதமரின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் போடப்படும். இதற்கு ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும்.

இதுபோல பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 1.95 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். 2022-க்குள் அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு வசதி ஏற்படுத்தித் தரப்படும். 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பத்தினருக் கும் தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்புக்கு ரூ.3 லட்சம் கோடிபாதுகாப்புத் துறைக்கு நடப்பு நிதி யாண்டில் ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது கடந்த நிதியாண்டின் ரூ.2.98 லட்சம் கோடியை விட அதிகம்.

சுகாதாரத் துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.62,398 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய சுகாதார திட்டத்துக்கு மட்டும் ரூ.32,995 கோடி ஒதுக்கப்படும்.

ரயில்வே துறைக்கு நடப்பு நிதியாண் டுக்கு ரூ.65,837 கோடியும் ரயில்வே மூலதன செலவுக்கு ரூ.1.6 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத் துறை மேம்பாட்டுக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி

மாதாந்திர சம்பளதாரர்கள் வரி விதிப்பில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. அதே சமயம் கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்கப்படுகிறது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 87ஏ பிரிவின்படி ரூ.12,500 வரிக் கழிவு வழங்கப்படும். மேலும் ஸ்டாண்டர்டு டிடெக் ஷன் ரூ.50 ஆயிரமாக இருக்கும். இதன்படி ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.

அதேநேரம், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஆண்டு வருமானம் உள்ள கோடீஸ்வரர்களுக்கு புதிதாக 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ஆக மொத்தம் 39 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுபோல, ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ஆக மொத்தம் 42.47 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x