Last Updated : 11 Jul, 2019 01:39 PM

 

Published : 11 Jul 2019 01:39 PM
Last Updated : 11 Jul 2019 01:39 PM

மக்களவையில் காரசார விவாதம்: வேதனைக்குரிய சூழலில் விவசாயிகள்- ராகுல்; நீங்கள்தான் காரணம் - ராஜ்நாத் சிங் பதில்

மக்களவையில் இன்று, நாட்டில் விவசாயிகள் நிலைமை வேதனைக்குரிய நிலையில் இருக்கிறது, மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். அதற்கு பதில் அளித்த மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகள் நிலைமைக்கு நீங்கள்தான் காரணம் என்று பதிலடி கொடுத்தார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்துக்குப் பின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், " நாட்டில் விவசாயிகள் நிலைமை ஏறகெனவே மோசமாக இருக்கிறது. இதில் வயநாட்டில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி கடனை திருப்பிச் செலுத்தக் கூறுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

விவசாயிகள் கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான உத்தரவை கேரள அரசுக்கு ரிசர்வ் வங்கி மூலம் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. பட்ஜெட்டிலும் விவசாயிகள் நலனுக்காகவும், கடனில் இருந்து மீள்வதற்கும் எந்தவிதமான குறிப்பிட்ட திட்டங்கள் இல்லை.

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் நிலைமை வேதனைக்குரியதாக இருப்பதால், அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து களைய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனப் பேசினார்.

இதற்கு பதில் அளித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், " விவசாயிகள் நிலைமை இப்போது மோசமானதற்கு நாங்கள் காரணமல்ல. இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகளின் தோல்விகள்தான் நிலைமைக்கு காரணம்.

பாஜக ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தி இருக்கிறோம், கிசான் சம்மான் நிதி யோஜனா அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கிறோம். சமீபத்தில் அரசுக்கு கிடைத்த அறிக்கையின்படி, விவசாயிகளின் வருமானம் முன்பு இருந்ததைக்காட்டிலும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.  விவசாயிகளின்துயரை நீக்க அரசு உறுதி பூண்டுள்ளது, இன்னும் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x