

நாகாலாந்து மாநிலம் முழுவதும் 'தொந்தரவான பகுதி' என்று மேலும் ஆறு மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஓர் அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
''நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி தொந்தரவு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதற்கு அரசு இயந்திரத்திற்கு, சிவில் அதிகாரிகளுக்கு உதவியாக செயல்படும் விதத்தில் ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
எனவே, இப்போது, மேற்கூறப்பட்ட மாநிலம் முழுவதும் அந்த மாநிலம் முழுவதும் ஒரு 'தொந்தரவான பகுதி' என அறிவிக்கப்பட்டு அங்கு ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், அந்தச் சட்டத்தின்நோக்கத்தின்படி 1958 (1958 ஆம் ஆண்டின் எண் 28) இன் பிரிவு 3 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜூன் 30, 2019 முதல் அமல்படுத்தப்பட்ட ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்துவதாக மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது.
இச்சட்டத்தின்படி ஒட்டுமொத்த மாநிலத்திலும் எந்தவித முன்தகவல் வழங்கப்படாமலேயே கைது செய்யலாம். ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நாகாலாந்தில் பல பத்தாண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது''.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்கள் நடந்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் அங்கு செயல்படும் பாதுகாப்புப் படையினரின் வசதிக்காக, நாகாலாந்தை 'தொந்தரவான பகுதி' என்று அறிவிப்பதைத் தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.