

ஆந்திராவில் கடன்தொல்லையால் விவசாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மண்டாஸா காவல் துணை ஆய்வாளர், சி.பிரசாத் தெரிவித்த விவரம்:
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டாஸா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கொண்டே தனய்யா, தன்னுடைய நிலத்திலேயே அங்குள்ள மரம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காவல் துணை ஆய்வாளர் தெரிவித்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த டோக்காரி தெரிவிக்கையில், ''அவருக்கு ஜெயராம் மற்றும் கிருஷ்ணய்யா ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். அவர் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்திருந்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட டிட்லித புயல் தாக்குதலில் அவரது மூன்று ஏக்கர் பயிரும் நாசமானது. இதற்காக அவருக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்பட வில்லை. பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அவரால் கடன்களை அடைக்கமுடியவில்லை. இச்சூழ்நிலை அவரை தற்கொலைக்குத் தள்ளியுள்ளது'' என்றார்.
போலீஸார், இந்திய குற்றவியல் சட்டம் 174ன் கீழ் உள்ள பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.