Last Updated : 12 Jul, 2019 12:55 PM

 

Published : 12 Jul 2019 12:55 PM
Last Updated : 12 Jul 2019 12:55 PM

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுமழை 

காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டைநிறுத்த ஒப்பந்தங்களை மீறி மோட்டார் பீரங்கி மூலம் குண்டுமழை பொழிந்தது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று செக்டர்களில் பாகிஸ்தான் இன்று சண்டைநிறுத்தத்திற்கான விதிகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பு அதிகாரி தெரிவித்ததாவது:

இன்று காலை 8 மணி அளவில், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியைச் சேர்ந்த பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் மற்றும் கிருஷ்ணா காத்தி செக்டர்கள் மற்றும் ராஜோவ்ரி மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ஷேரா செக்டரிலும் எந்தவித காரண காரியமுமின்றி யுத்த நிறுத்த மீறலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. சிறியரக ஆயுதங்களைக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர் மோட்டார் பீரங்கி மூலம் குண்டுவீச்சுக்களில் ஈடுபட்டது.

இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இத்துப்பாக்கிச் சூடு மற்றும் மோட்டார் பீரங்கிமூலம் நடத்திய குண்டுவீச்சுக்களில் எந்தவித உயிர்ச்சேதமும் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் துருப்புக்கள் மான்கோட் பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குலினால் மக்கள் ஒருவித அச்ச உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் கட்டுப்பாட்டுப் பாதையில் பாக்கிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியது நினைவிருக்கலாம்.

இந்திய ராணுவம் அளித்த தகவலின்படி இந்த ஆண்டு 1,248 போர்நிறுத்த மீறல்கள் (சி.எஃப்.வி) மற்றும் நான்கு உயிரிழப்புகள் கட்டுப்பாட்டு வரிசையில் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x