Last Updated : 09 Jul, 2019 10:42 AM

 

Published : 09 Jul 2019 10:42 AM
Last Updated : 09 Jul 2019 10:42 AM

கர்நாடக அரசு கவிழுமா? சபாநாயகர் என்ன முடிவெடுப்பார்?- முதல்வர் குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால்,  அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் எனக் கோரி பாஜக சார்பில் இன்று மாநில அளவில் போராட்டம் நடைபெற உள்ளது.

அதேசமயம், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்றுக்கொண்டுவிட்டாலே அது முதல்வர் குமாரசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால், இன்று சபாநாயகர் முடிவை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்து வருகிறார்.

225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 39 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும், கேபிஜேபி கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு அளித்து வருகின்றனர். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததால், இரு கட்சியின் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலர் ஏற்கவில்லை, வெளிப்படையாகவே கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங் எம்எல்ஏ தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 6-ம தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 10 பேரும், ஜேடியு கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

மேலும், தொழில்துறை அமைச்சராக இருந்த சுயேட்சை எம்எல்ஏ ஹெச் நாகேஷ், கேபிஜேபி கட்சியின் எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகியோரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால், 225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணிக்கு அளித்த ஆதரவை நாகேஷ், கேபிஜேபி கட்சி எம்எல்ஏ விலக்கிக்கொண்டதால், சட்டப்பேரவையில் அரசின் பலம் 115-ஆகக் குறைந்தது.

ஒருவேளை 14 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ், ஜேடியு கட்சியின்(78+37) பலம் 115லிருந்து 101 ஆகக் குறையும். 211 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 106 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால், ஏறக்குறைய ஆதரவை இழந்துவிடும். சபாநாயகர் இன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டாலே, முதல்வர் குமாரசாமிக்கு சிக்கலாகிவிடும்.

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியில் இருக்கும் முதல்வர் குமாரசாமி உடனடியாக முதல்வர் பதவியில் இருநது ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.மதுசூதனா நிருபர்களிடம் கூறுகையில், "இன்று காலை 11 மணிக்கு மேல் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் பாஜகவினர் ஆளும் அரசைக் கண்டித்தும், பெரும்பான்மை இல்லாத அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை. முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துவோம்.

சபாநாயகர் ரமேஷ் குமார் அனைத்து எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை இன்று ஏற்றுக்கொண்டால், முதல்வர் குமாரசாமிக்கு வேறுவழி இல்லை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் தனது அரசுக்கு பெரும்பான்மையை சட்டப்பேரவையில் குமாரசாமி நிரூபித்தாக வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x