Last Updated : 10 Jul, 2019 02:23 PM

 

Published : 10 Jul 2019 02:23 PM
Last Updated : 10 Jul 2019 02:23 PM

ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி மும்முரம்: மத்திய அரசு தகவல்

ரயில்வேயில் ஜூன் முதல்தேதி நிலவரப்படி 2.98 லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், அதில் 2.94 லட்சம் இடங்களை நிரப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக  இன்று பதில் அளித்தார். அப்போது அவர் பேசியது:

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் 4.61 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பல்வேறு காரணிகள், அதாவது பயிற்சியில் இருப்பவர்கள், விடுமுறையில் இருப்பவர்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வேலைக்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த 1991-ம் ஆண்டில் ரயில்வே துறையில் 16 லட்சத்து 54 ஆயிரத்து 985 பேர் வேலையில் இருந்தார்கள். இப்போது, அதாவது 2019-ம் ஆணஅடில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 101 பேர் பணியாற்றுகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், ரயில்சேவையில் எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை.

ஜுன் 1-ம் தேதி நிலவரப்படி ரயில்வே துறையில் ஏ,பி,சி,டி பிரிவில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 574 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலியிடங்களை நிரப்பும் பணி ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி மூலம் துரிதமாக நடந்து வருகிறது. 2 லட்சத்து 94 ஆயிரத்து 420 பேரை பணிக்கு புதிதாகத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

2019-20-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 843 பணியிடங்களுக்கு தேர்வு நடந்திருக்கிறது. இனிமேல், ஒரு லட்சத்து 42ஆயிரத்து 577 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஊழியர்களைத் தேர்வு செய்யும் முறையில் 10 சதவீதம் பொருளாதாராத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்படும் இவ்வாறு பியூஷ் கோயல்  பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x