Last Updated : 10 Jul, 2019 12:31 PM

 

Published : 10 Jul 2019 12:31 PM
Last Updated : 10 Jul 2019 12:31 PM

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்: ஆளுநர், சபாநாயகரை சந்திக்கும் பாஜக எம்எல்ஏக்கள்

கர்நாடகச் சட்டப்பேரவையில் ஆளும் ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, ஆளூநர் வாஜுபாய்வாலா, சபாநாயகர் ரமேஷ் குமாரை பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்க உள்ளனர்.

கர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமா கடித்ததை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. 8 எம்எல்ஏக்கள் கடிதம் முறையின்றி இருப்பதால் தன்னால்கடித்ததை ஏற்க முடியாது, 5 எம்எல்ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 13 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பிற்பகலுக்குப்பின், ஆளுநர் வாஜுபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ் குமார் ஆகியோரைச் சந்தித்து முறையிட உள்ளனர். ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணிக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் எனக் கோர உள்ளனர்.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.மதுசூதனன் பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறுகையி்ல் " இன்று பிற்பகலுக்கு பின் எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை ஆளும்கட்சி நிரூபிக்க உத்தரவிடக் கோர உள்ளோம். கூட்டணியிக் கட்சியில் இருந்து 16 எம்எல்ஏக்கள் விலகிவிட்டார்கள்.

அதற்கு முன்னதாக சட்டப்பேரவை முன் உள்ள மகாத்மா காநதி சிலை முன் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் தர்ணா போராட்டம் நடத்துவோம். சபாநாயகர் ரமேஷ் குமாரைச் சந்தித்து, முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோருவோம். 10 நாள் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. அன்றைய தினமே பெரும்பான்மையை நிரூபிக்க கோருவோம்.

ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்கள் அனைவரும் வியாழக்கிழமைக்குள் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதத்தை அளிக்கும்படி கோரியுள்ளார். அதில் 5எம்எல்ஏக்களை வரும் 12-ம் தேதி தன்னைச் சந்திக்கும்படியும், ராஜினாமா கடிதம் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்க கோரியுள்ளார். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதால், 16 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும் தங்களின் ராஜினாமா கடித்த்தின் ஒருநகலை ஆளுநருக்கு அனுப்பிவிட்டார்கள். ஆதலால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் அரசுக்கு ஆளுநர் உத்தரவிடுவார் " எனத் தெரிவித்தார்.

225 எம்எல்ஏக்கள் கொண்ட கர்நாடகச் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 37 பேரும் இருக்கின்றனர். பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கின்றனர. இதில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ஒருவர், கேபிஜேபி எம்எல்ஏ ஒருவர், சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் உள்ளனர்.

116 எம்எல்ஏக்களுடன் இருந்த காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏக்கள் விலகியதால், தற்போது 100-க்கும் குறைவாக எண்ணிக்கை குறைதுவிட்டது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை.

தற்போது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆகஇருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 105 உறுப்பினர்கள் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிக்கு தேவை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் கூட கூட்டணி அரசுக்கு இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x