Last Updated : 09 Jul, 2019 11:22 AM

 

Published : 09 Jul 2019 11:22 AM
Last Updated : 09 Jul 2019 11:22 AM

ரயில் இயக்கத்தில் முதல் முறையாக தனியார் நிறுவனம்: லக்னோ-டெல்லி வழித்தட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தேர்வு

ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டாலும், முதல் முறையாக ரயில் இயக்கத்தில் தனியார் நிறுவனங்கள் வர உள்ளன.

நாட்டிலேயே முதல் முறையாக லக்னோ-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தபோதிலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துவிட்டது.

அடுத்ததாக 500 கி.மீ. தொலைவுள்ள 2-வது வழித்தடத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  

டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வியாழன், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வார நாட்களில் டெல்லி முதல் லக்னோ வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

லக்னோவில் இருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் தேஜாஸ் ரயில், நண்பகல் 1.35 மணிக்கு டெல்லி சேர்ந்துவிடும். டெல்லியில் இருந்து 3.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.05 மணிக்கு மீண்டும் லக்னோ வந்து சேர்நதுவிடும். தற்போது இந்த ரயில் ஆனந்த் நகர் ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் தனியாரிடம் இயக்கத்தை அளித்து குத்தகை தொகை, நிதி மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களைக் கவனிப்பார்கள்.

இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெல்லி-லக்னோ வழித்தடத்தில் இயக்கப்படும் தேஜாஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த முடிவு ஒருமாதத்துக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. இந்த ரயிலை இயக்குவதற்கான ஏலம் விடப்பட்டு அதன்பின் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

சோதனை முயற்சியாக இரு ரயில்கள் இயக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். அடுத்த 100 நாட்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். குறைந்தபட்சம் ஒரு ரயில் இயக்கத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவோம். முக்கிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் குறைந்த போக்குவரத்து நெரிசல் இருக்கும் வழித்தடத்தை ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

டெல்லி-லக்னோ வழித்தடத்தில் தற்போது 53 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இயக்கப்படும் ஸ்வர்ன் சதாப்தி ரயிலுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x