Last Updated : 13 Jul, 2019 08:02 AM

 

Published : 13 Jul 2019 08:02 AM
Last Updated : 13 Jul 2019 08:02 AM

வீட்டு நிலவரம் அறிந்து ஆலோசனை வழங்குவதற்காக பாஜக எம்.பி.க்களின் குடும்பத்தினருடன் காலை உணவு அருந்தும் பிரதமர் மோடி

பாஜக எம்.பி.க்களின் வீட்டு நிலவரம் குறித்து அறிந்து ஆலோசனை வழங்குவதற்காக அவர்களின் குடும்பத்தினருடன் காலை உணவு அருந்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தம் வீடுகளில் நிலவும் பிரச்சினைகளின் தாக்கம் பெரும்பாலானோருக்கு தம் அலுவலக செயல்பாடுகளில் வெளிப்படுவது உண்டு.

இதுபோன்ற பிரச்சினைகள் தங்கள் பாஜக எம்.பி.க்களுக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக, அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

இதற்காக அவர், பாஜக எம்.பி.க்களை ஏழு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுக்களாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புபிரதமரின் வீட்டில் காலை உணவுடன் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக எம்.பி.க்கள்வட்டாரம் கூறும்போது, ‘எங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு இழப்பு நேரும் வாய்ப்புகள் அதிகம். இதை கருத்தில் கொண்டு,எங்களுடன் சேர்ந்து காலைஉணவை அருந்தும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். அந்தசமயத்தில், அவருடன் நேரடியாக பேசி நெருக்கத்தை வளர்க்கும் வாய்ப்புகளும் எங்களுக்கு கிடைக்கிறது. இதில், குடும்பப் பிரச்சினையை கூறுபவர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்குகிறார்’ எனத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டங்களின் முக்கியத்துவத்தை எம்.பி.க்களுக்கு எடுத்துரைத்து, அதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார். தம் தொகுதிவாசிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்து பிரச்சினைகளை அறிய வேண்டும் எனவும், அவற்றை தீர்க்கத்தன்னிடமும் நேரடியாக அணுகலாம் என்றும் எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்துகிறார்.

இந்நிலையில், நேற்று காலை ஐந்தாவது குழுவை மோடி சந்தித்து பேசியதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x