சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு
Updated on
1 min read

கர்நாடக அரசியலில் பெரும் நிலையற்ற சூழல் நிலவி வரும் நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார், அதற்கான நேரத்தை சபாநாயகரிடம் கேட்டிருக்கிறேன் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடரட்டும், செவ்வாய்கிழமை மீண்டும் விசாரிப்போம் எனத் தெரிவித்தது.

பெரும் பரபரப்புக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையின் 11 நாள் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டுவந்தார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் அதை எதிர்த்து கோஷமிட்டனர்.

அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, " சமீபத்தில் நடந்துள்ள பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் நான் சொல்வதெல்லாம், நான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளேன். அதற்காக பேரவைத் தலைவரிடம் நான் நேரம் கேட்கிறேன்.

இதற்கான சூழல் இப்போது எழுந்திருப்பதால் நான் கேட்கிறேன். நான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து முதல்வராக பதவியில் தொடர முடியும். என்னுடைய பதவியைப்  தவறாகப் பயன்படுத்தி என்னுடைய இடத்தை காப்பாற்றிக்கொள்ளமாட்டேன். ஆதலால் நம்பிக்கை வாக்கெடுப்பை நானே முன்வந்து கோரியிருக்கிறேன். சில எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால்தான் இத்தனை குழப்பமும் ஏற்பட்டுள்ளது.நான் எந்தவிதமான விஷயத்துக்கும் தயார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க நான் தயார் இல்லை" எனத் தெரிவித்தார்.

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணிக்கு 116(காங்.78, ஜேடிஎஸ்37,பகுஜன் சமாஜ்-1) எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு சுயேட்சை எம்எல்ஏக்கள்ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை ராஜினமா செய்து அரசுக்கு ஆதரவை விலக்கினர்.

பாஜவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்கள் தேவை. தற்போதுள்ள நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா  ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆளும் கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in