Published : 06 Jul 2019 08:18 AM
Last Updated : 06 Jul 2019 08:18 AM

அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் காப்பீடு, ஊடகம், விமான துறைகளில் விதிமுறைகளை தளர்த்த அரசு முடிவு

அந்நிய நேரடி முதலீடுகளை (எஃப்டிஐ) ஈர்ப்பதற்கு விதிமுறைகளை தளர்த்த அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். குறிப்பாக விமான துறை, காப்பீடு மற்றும் ஊடகத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள் அதிக அளவில் வரவேற்கப்படுவதாக அவர் கூறினார்.

அந்நிய முதலீடுகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கு விதிமுறைகளை தளர்த்த அரசு தயாராக உள்ளது என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.

தற்போது ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26 சதவீத அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் உயர்த்தப்படும் வரம்பு குறித்த அறிவிப்பு எதையும் அமைச்சர் குறிப்பிடவில்லை.

இதற்கு முன்பு ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 2015-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது.

செய்தி சேனல் மற்றும் எஃப்எம் ரேடியோக்களில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உள்ளது. பொழுதுபோக்கு சேனல்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீத அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது.

நிதி நெருக்கடியில் தவிக்கும் பத்திரிகை நிறுவனங்களில் அந்நிய முதலீடு 26 சதவீத அளவுக்கே அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய உரிமையாளர் வசம் 74 சதவீதம் இருக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை இரு மடங்கு அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய முதலீடு மிகவும் அவசியமானதாகும். 8 சதவீத வளர்ச்சியை எட்டினாலே இந்த இலக்கை எட்ட முடியும்.

தொழில் தொடங்க எளிமையான விதிமுறைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை இந்தியா கடந்த ஆண்டு எட்டியது. இதன் மூலம் மேலும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x